Tuesday, January 27, 2009

”நாடு அதை நாடு”

படம் = நாடோடி
பாடல் = கண்ணதாசன்

நாடு அதை நாடு
அதை நாடாவிட்டால்
ஏது வீடு?

பாடும் பொழுதெல்லாம் அதையே பாடு
மானம் பெரிதென்று வாழும் பண் பாடு
மானம் பெரிதென்று வாழும் பண்பாடு”

பாலைவனம் என்ற போதும் நம் நாடு
பாறை மலை கூட நம் எல்லைக் கோடு
ஆறு நிலம் பாய்ந்து விளையாடும் தோட்டம்
வீர சமுதாயமே எங்கள் கூட்டம்

வானம் குலமாந்தர் முகம் பார்த்ததில்லை
வஞ்ச நினைவெங்கள் மனம் பார்த்ததில்லை
வீரர் விழிதாழ்ந்து நிலம் பார்த்ததில்லை
வெற்றித் திருமாது நடை போடும் எல்லை

பசி என்று வருவோர்க்கு விருந்தாக மாறும்
பகைவர் முகம் பார்த்துப் புலியாகச் சீறும்
நிலத்தினில் உயிர் வைத்து உரிமை கொண்டாடும்
எதிர்த்து வருவோரை உரமாகப் போடும்



“நாடு அதை நாடு
அதை நாடாவிட்டால்
ஏது வீடு?”

தனி நபர் லாபத்திற்காகச் சட்டங்கள் புறக்கணிக்கப்படுவதும், அமைப்பின் வளத்திற்காகத் தர்மங்கள் நசுக்கப்படுவதும், மாநிலங்களின் நலத்திற்காகத் தேசிய ஒருமைப்பாடு கேலிக்குள்ளாக்கப்படுவதும் அதிகரித்து வரும் இந்த அவசர உலகத்தின் அனைத்துப் பிரச்சனைகளின் ஆணிவேர் எது என்பதையும் அதிலிருந்து சமுதாயம் விடுதலை பெறுவதற்கான வழி என்ன என்பதையும் மேலுள்ள வரிகளின் மூலம் கவிஞர் தெளிவாக்குகிறார்.

நமக்கிடையேயானப் போட்டிகள் நேர்மையானதாக இல்லாதபட்சத்தில், தனித்தனியான சிறிய வட்டங்களின் வளர்ச்சி, ஒட்டுமொத்தமாய்ப் பார்க்கும்போது அதனதன் பெரிய வட்டங்களின் ஆக்கத்துற்கு ஆதரவாக இருப்பதைவிட, அழிவிற்கே சாதகமாய் அமையும். அதேசமயம் பெரிய வட்டங்களின் வளர்ச்சிக்காகச் சிறிய வட்டங்கள் விட்டுக் கொடுக்கும்போது, அங்கு ஆரோக்யமானப் போட்டியும் நிலவும்; ஒட்டுமொத்த வளர்ச்சியும் காணப்படும்.

“பாடும் பொழுதெல்லாம் அதையே பாடு
மானம் பெரிதென்று வாழும் பண் பாடு
மானம் பெரிதென்று வாழும் பண்பாடு”

இந்த உண்மையை உணர்ந்து உன் ஒவ்வொரு அசைவுகளிலும், சமுதாயத்திற்காக, நாட்டிற்காகப் பாடுபடு. மானமே (நாட்டின்) நமது லட்சியம் என்ற உயர்ந்த கொள்கையினை என்றும் பாடிக்கொண்டிரு, உன் சிந்தனையாலும் செயலாலும் (வாழும் பண் பாடு). எல்லாவற்றையும் விட உயர்ந்தது மானமே என்பது நம் பண்பாடு அல்லவா (வாழும் பண்பாடு).

“பாலைவனம் என்ற போதும் நம் நாடு
பாறை மலை கூட நம் எல்லைக் கோடு
ஆறு நிலம் பாய்ந்து விளையாடும் தோட்டம்
வீர சமுதாயமே எங்கள் கூட்டம்”

வெறும் பாலைவனமாகவே இருந்தாலும், இது நமது நாடு; நம் முன்னோர்கள் பிறந்து, வளர்ந்து, மரித்து, இந்த மண்ணோடும், நீரோடும், காற்றோடும் கலந்து என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் புண்ணிய பூமி. பாறைகளும், மலைகளும் மட்டுமே நிரம்பி இருந்தாலும் கவலையில்லை; அவைகள் எங்களின் எல்லைகளாக, அரண்களாக எங்களைக் காத்து நிற்கும். இப்படி இருக்கும்போது எங்கள் நாட்டிலோ, ஜீவ நதிகள் கரை ஏறிப் பாய்ந்து, கழனி செய்து, காணும் இடமெல்லாம் கனித்தோட்டங்களாய் செழித்து நிற்கின்றன. இந்த அபரிமிதமான வளத்தின் காரணமாக, அறிவும் வலிமையும் ஒருங்கே பெற்று எங்கள் மக்கள் அனைவருமே வீரர்களாக மாறிவிட்டனர்.

“வானம் குலமாந்தர் முகம் பார்த்ததில்லை
வஞ்ச நினைவெங்கள் மனம் பார்த்ததில்லை
வீரர் விழிதாழ்ந்து நிலம் பார்த்ததில்லை
வெற்றித் திருமாது நடை போடும் எல்லை”

எல்லாம் இருக்கும் எங்கள் நாட்டில் இல்லாதது மூன்று உள்ளது; அவைகள்
1. அன்பு, அழகு, அறிவு ஒருங்கே அமையப்பெற்றும், அகம்பாவம் அற்று, ‘பெருக்கத்து வேண்டும் பணிவு’ எனும் இலக்கணப்படி எம் மங்கைகள் அடக்கத்துடன் வாழ்வதனால், வானம் எம்மங்கையரின் முகங்களை இதுவரைப் பார்த்ததில்லை.
2. பகிர்ந்துண்ணுதலும், சகிப்புத் தன்மையும் உள்ளடக்கிய கூட்டுக் குடும்பம் எங்கள் வாழ்க்கை நெறியாக அமைந்துள்ளதால், தீய எண்ணங்கள் எங்கள் மக்களின் மனங்களைத் தொட்டுக்கூடப் பார்த்ததில்லை.
3. தர்மத்திற்காக மட்டுமே நாங்கள் போரிடுவதால், எங்கள் வீரர்கள் எந்தப் போர்க்களத்திலும் தோல்வியுற்று, தலை கவிழ்ந்து நிலத்தைப் பார்த்ததில்லை.
இவ்வாறு, பண்பாடு, ஒழுக்கம், வீரம் மூன்றும் எங்கள் இரத்தத்தொடு கலந்துவிட்டமையால், எங்கள் நாடே வெற்றித் திருமாது நடைபோடும் எல்லையாக அமைந்துவிட்டது.

“பசி என்று வருவோர்க்கு விருந்தாக மாறும்
பகைவர் முகம் பார்த்துப் புலியாகச் சீறும்
நிலத்தினில் உயிர் வைத்து உரிமை கொண்டாடும்
எதிர்த்து வருவோரை உரமாகப் போடும்”

பசித்து அடைக்கலம் தேடி வருபவர்களின் பசி ஆற்றுதல் சாதாரண விருந்தோம்பல். நாங்களோ எங்களையே அவர்களுக்கு விருந்தாக ஆக்கிக் கொள்வோம். எங்களை அழித்துக் கொண்டால்தான் அவர்களைக் காக்க முடியும் என்ற நிலை வந்தால், எங்களையே பலி கொடுக்கவும் நாங்கள் தயங்குவதில்லை. ஆனால் எங்களை எதிரி என எண்ணிச் சீண்டிப்பார்க்க யாரும் வந்தால், அன்று நாங்கள் புலியாக மாறுவோம். எங்கள் பலம் அறியாமல் போருக்கு வந்த அவர்கள் அறியாமைக்கு மனம் வருந்தி, இரக்கம் கொண்டு, எங்களின் ஆற்றலை வெறும் சீற்றமாகக் காட்டி விரட்டுவோம். அப்படியும் புரியாமல் போருக்கு நின்றால், இந்த மண்ணை எங்கள் உயிராக எண்ணிப் போரிட்டு எங்கள் உரிமையை நிலை நாட்டிக் கொண்டாடுவோம். முடிவில் எதிரிகளை அழித்து, அவர்கள் உடல்களை எங்கள் கழனிகளுக்கு எருவாக இடுவோம்.

------------------------------------------

கவியரசரின் இக்கனவு மெய்ப்பட வேண்டும்; வரம் கைவசமாவது விரைவினில் வேண்டும்.

2 comments:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

சமூகப்பற்றாளன் ஞானசித்தன் said...

அருமை