Tuesday, January 27, 2009

இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ

படம்: நிழல் நிஜமாகிறது
பாடல்: கண்ணதாசன்
இசை: விஸ்வநாதன்

இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ
இதுவரை நடித்தது அது என்ன வேடம்
இது என்ன பாடம்

கல்லான முல்லை இன்றென்ன வாசம்
காற்றான ராகம் ஏனிந்த கானம்
வெண்மேகம் அன்று கார்மேகம் இன்று
யார் சொல்லி தந்தார் மழைக்காலம் என்று
மன்மதன் என்பவன் கண் திறந்தானோ
பெண்மை தந்தானோ (இலக்கணம்)

என் வாழ்க்கை நதியில்
கரை ஒன்று கண்டேன்
உன் நெஞ்சிலே ஏதோ
கறை ஒன்று கண்டேன்
புரியாததாலே திரை போட்டு வைத்தேன்
திரை போட்ட போதும் அணை போட்டதில்லை
மறைத்திடும் திரைதனை விலக்கி வைப்பாயோ
விளக்கி வைப்பாயோ

தள்ளாடும் பிள்ளை உள்ளமும் வெள்ளை
தாலாட்டு பாட தாரமில்லை
தெய்வங்கள் எல்லாம் உனக்காக பாடும்
பாடாமல் போனால் எது தெய்வமாகும்
மறுபடி பிறக்கும் உனக்கொரு பாதை
உரைப்பது கீதை

மணியோசை என்ன இடி ஓசை என்ன
எது வந்த போதும் நீ கேட்டதில்லை
நிழலாக வந்து அருள் செய்யும் தெய்வம்
நிஜமாக வந்து எனை காத்த கண்ணே
நீ எது நான் எது ஏன் இந்த சொந்தம்
பூர்வ ஜன்ம பந்தம் (இலக்கணம்)

============================================

நாயகன், நாயகி இருவருமே மிகுந்த ego உள்ளவர்கள். உள்ளுக்குள் நேசம் இருந்தும், வெளியே சொல்ல மறுத்து, சந்திக்கும் போதெல்லாம் மோதிக் கொள்வார்கள். படிப்படியாக அந்த இடைவெளி குறைந்து வரும் வேளையில் அவன் மேல் ஒரு பழி விழுகிறது. இந்தச் சூழ்நிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டியுள்ளார் கவியரசர்.

பாடலும், எனது பார்வையும் பின் வருமாறு;

பொது:
“இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ
இதுவரை நடித்தது அது என்ன வேடம் இது என்ன பாடம்”
இயல்பிலிருந்து இவர்கள் மாறிவிட்டார்களோ; இவர்களுக்கு இடையே ஒரு காவியம் தொடங்கிவிட்டதோ! இதுவரை மறைத்து நடித்தது எதற்காக; யாருக்கு எதைப் புரிய வைக்க?)

அவன்:
“கல்லான முல்லை இன்றென்ன வாசம்
காற்றான வாழ்வில் ஏனிந்த மாற்றம்”
முல்லை என்பதே மணம்தான்; மனம் என்பதே அன்புதான். அது கல்லால் ஆக்கப்பட்டதோ என்று அவன் எண்ணியிருந்த வேளையில் அவளிடமிருந்து அன்புமணம் கண்ட அவனுக்கு இன்ப அதிர்ச்சி.
காற்றுப்போல தளைகளின்றி சுழன்றிருந்தாயே இன்று எதற்காக இந்த மாற்றம் என்று திகைக்கிறான்.
(அவளிடமிருந்து வெளிப்பட்ட மெல்லிய காதலை மலரின் மணத்துடன் ஒப்பிடுகிறார், கவிஞர். அவள் இன்னும் முழுமையாக தன் காதலைக் கூறவில்லை அல்லவா. வெறும் மணம் மட்டுமே அவனைச் சென்று அடைந்துள்ளதாகக் கூறியிருப்பது அழகு)

“வெண்மேகம் அன்று கார்மேகம் இன்று
யார் சொல்லித் தந்தார் மழைக்காலம் என்று
மன்மதன் என்பவன் கண் திறந்தானோ
பெண்மை தந்தானோ.”
பருவ சிந்தனையற்ற பிள்ளை மனம் வெண்மேகம்; ப.சி. வந்த மனம் கார்மேகம். (கார்மேகம்தானே ‘பலன்’ கொடுக்கும்-கவிஞரின் தமிழ் வாழ்க!) 'பருவம்' வந்தால் எல்லா ‘வெண்மேகமும்’ ‘கார்மேகம்’ ஆகிவிடும். இங்கு மன்மதன் கண் திறக்க, கார்மேகமானது அவள் பெண்மை.

அவள்:
“என் வாழ்க்கை நதியில் கரை ஒன்று கண்டேன்
உன் நெஞ்சில் ஏதோ கறை ஒன்று கண்டேன்”
எந்த இலக்குமின்றி ஓடிக்கொண்டிருந்த அவள், அவன் வரவால் தன் வாழ்விற்கு ஒரு பொருளை (கரை) கண்டாள். அதே நேரம் அவன் மேல் விழுந்த பழியால் அவன் நெஞ்சில் ஒரு இருளை (கறை) யும் கண்டாள்.
“புரியாததாலே திரை போட்டு வைத்தேன்
திரை போட்ட போதும் அணை போட்டதில்லை”
அவனை நம்புவதா? பழியை நம்புவதா என்ற குழப்பத்தின் விடை தெரியாது, லேசாகத் திறந்த தனது மனதைத் தானே திரையிட்டு மூடிக் கொண்டாள். ஆனாலும் முழுவதுமாக அவன் நினைவுகள் தரும் இன்ப வெள்ளத்திற்கு அணை போட அவளால் முடியவில்லை.
”மறைத்திடும் திரைதனை விலக்கி வைப்பாயோ
விளக்கி வைப்பாயோ.”
இடையே விழுந்துள்ள திரையை அவனே வந்து விலக்கவேண்டும், தன் மேல் விழுந்த பழியை வீண்பழி என்று அனைவரும் உணர விளக்குவதன் மூலம் என்றும் வேண்டுகிறாள்.


அதே படத்தில் இன்னொரு ஜோடி இருவரும் நாயகி வீட்டில் வேலை பார்ப்பவர்கள். தன்னை அவமானப் படுத்தி வெறுக்கும் அவளைக் காக்க பழியை ஏற்று அவளைக் காப்பாற்றி வருகிறான் அவன். அவனது தூய அன்பை உணர்ந்து அவனைப் பற்றி அவள் பாடுவதாக வரும் வரிகள் இவை.

“தள்ளாடும் பிள்ளை உள்ளமும் வெள்ளை
தாலாட்டுப் பாட ஆதாரமில்லை”
வாழ்வில் எந்தப் பிடிப்பும் இன்றி தடுமாறிக்கொண்டிருக்கும் வெள்ளை மனம் கொண்ட பிள்ளை அவன். இருந்தும் அவளைக் காப்பாற்றி, அவளது குழந்தையைத் தாலாட்டிக் கொண்டிருக்கிறான் அதற்கான எந்த உரிமையும் இன்றி.
”தெய்வங்கள் எல்லாம் உனக்காகப் பாடும்
பாடாமல் போனால் எது தெய்வமாகும்”
அவனே இன்னும் குழந்தை. அவனுக்கே தேவை ஒரு தாலாட்டு. எந்த மனிதனுக்கும் அதற்குத் தகுதி இல்லை. தெய்வமே வந்து பாடினால்தான் உண்டு. அப்படி இங்கு வந்து பாட முடியாமல் போனால் அதை எப்படித் தெய்வம் என்று அழைக்கமுடியும்?

“மறுபடி பிறக்கும் உனக்கொரு பாதை
உரைப்பது கீதை.”
அவனது அன்பும், தியாகமும் வீண்போகாது. அவன் வாழ்வு மலரும்; புதிய பாதை திறக்கும். இது இறைவன் வாக்கு.

”மணியோசை என்ன இடி ஓசை என்ன
எது வந்த போதும் நீ கேட்டதில்லை”
அவன் காது கேளாதவன். அவனுக்கு சிறிய ஓசையும் (மணி) ஒன்றுதான்; பெரிய ஓசையும் (இடி) ஒன்றுதான். இரண்டிற்கும் அவன் சலனப்படுவதில்லை. அதுபோல் அவனது பிள்ளை மனம், வரும் சோதனையின் அளவைக் கண்டு நடுங்குவதில்லை. அவனுக்கு சிறிய சோதனையும் ஒன்றுதான்; பெரிய சோதனையும் ஒன்றுதான். அதனால்தான் திருமணமின்றித் தாயான பெண்ணைத் தன்னுடன் வைத்துக் காத்து வருகின்றான்.

”நிழலாக வந்து அருள் செய்யும் தெய்வம்
நிஜமாக வந்து எனைக் காத்த கண்ணே
நீ எது நான் எது ஏன் இந்த சொந்தம்
பூர்வ ஜென்ம பந்தம்.”
நிழல் எப்படிப் பிரிவதில்லையோ அதுபோல் தொடர்ந்து நின்று காக்கும் தெய்வம் நீ. மற்றவர்களைப் போல் அல்லாமல் நிஜமாக வந்து என்னைக் காத்த கண் போன்றவனே. நமக்கிடையே வந்துள்ள இந்தச் சொந்தம், பூர்வ ஜென்ம பந்தம் என்று அவள் முடிக்கிறாள்.

No comments: