Monday, December 25, 2006

அன்புள்ள அத்தான் வணக்கம்

அன்புள்ள அத்தான் வணக்கம்-உங்கள்
ஆயுளைக்கொண்டாள் மயக்கம்.

தென்னவர் கையிருக்கும் திருவாளைப் போலிருக்கும்
கண்ணிருந்தும் இல்லை உறக்கம்.

மாலைப் பொழுது வந்து பகைபோலக் கொல்லும்
வருவார், வருவார் என்ற சேதியும் சொல்லும்
ஆலிலை போன்ற உடல் ஆசையில் துள்ளும்
அந்தியிலே இயற்கை என்னையும் வெல்லும்.

(இப்படி எழுதியும் நான் வரவில்லையென்றால்?)

பொன்மணி மேகலை பூமியில் வீழும்
புலம்பும் சிலம்பிரண்டும் எனை விட்டு ஓடும்
கைவளை சோர்ந்துவிழும் கண்களும் மூடும்
காண்பவர் உங்களைத்தான் பழிசொல்ல நேரும்

அன்புள்ள அத்தான் வணக்கம்-திருமணம்
ஆகுமுன் வேண்டாம் குழப்பம்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

அன்புள்ள அத்தான் வணக்கம்
உங்கள் ஆயுளைக் கொண்டாள் மயக்கம்

முதல் வரி தலைவனுக்குக் கூறும் முகமன் (அன்புள்ள அத்தான் வணக்கம்).
இரண்டாவது வரியில், தன்னைப் பற்றி எழுதவேண்டிய இடத்தில் உங்கள் காதலி/மனைவி என்று எழுதாமல் உங்கள் ஆயுளைக் கொண்டாள் என்று எழுதுகிறாள். இதனால் அவள் சொல்ல விழைவது எனக்கென்று எந்த அடையாளமும் இல்லை. உன் ஆயுள் எதுவோ அதுதான் நான். அதன் பின் நான் இல்லை. ஒன்று எனக்கு மரணம்; அல்லது நான் நடைபிணம். இப்படிப்பட்ட நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கும் தனக்கு ஒரு மயக்கம்(குழப்பம்) என்று மடலைத் தொடங்குகிறாள் (உங்கள் ஆயுளைக் கொண்டாள் மயக்கம்)

தென்னவர் கையிருக்கும் திருவாளைப் போலிருக்கும்
கண்ணிருந்தும் இல்லை உறக்கம்.

இந்தியாவினை எத்தனையோ பேரரசர்கள் ஆண்டார்கள். ஆனால் எந்த வடநாட்டுப் பேரரசர்களும் வெல்ல முடியாத ஒரு நிலப்பகுதி இங்கே இருந்தது என்றால் அது சேர, சோழ, பாண்டியர்களின் எல்லைக்குட்பட்ட தென்னாடுதான். காரணம் அவர்களின் கையிலே இருந்த ஒளி வீசும் திருவாள். அதற்கு இணையானது உனது கண்கள் என்று சொன்னீர்கள். இவ்வளவு ஒளி வீசும் கண்கள் இருந்தும் என்ன பயன்? ‘சாதாரண' கண்களைப் பெற்றுள்ள மற்றப் பெண்களுக்குக் கிடைக்கும் சுகமான உறக்கத்தை இந்த திருவாள் கண்கள் எனக்குக் கொடுக்கவில்லையே. (தென்னவர் கையிருக்கும் திருவாளைப் போலிருக்கும் கண்ணிருந்தும் இல்லை உறக்கம்)

மாலைப் பொழுது வந்து பகைபோலக் கொல்லும்
வருவார் வருவார் என்ற சேதியும் சொல்லும்
ஆலிலை போன்ற உடல் ஆசையில் துள்ளும்
அந்தியிலே இயற்கை என்னையும் வெல்லும்

பகலை எப்படியோ சமாளித்துவிடுகிறேன் (நண்பர்கள், உறவினர்களுக்கு நன்றி). இந்த மாலைதான் ஒரு பகைவனைக் கொல்வதைப்போல என்னை இரக்கமின்றிக் கொல்லுகின்றது. ஆம். அதுதான் நாம் பிரிந்திருக்கிறோம் என்பதையும்; வரும் இரவை நான் தனிமையில் கழிக்கவேண்டியுள்ள கொடுமையையும் நினைவூட்டி என்னைக் கொல்லாமல் கொல்கிறது (மாலைப் பொழுது வந்து பகைபோலக் கொல்லும்).

இரவு்-பகல், இன்பம்-துன்பம்; இயற்கையில் எல்லாம் இரட்டைகள் அல்லவா! அதன்படி துன்பத்தைக் கொடுத்த மாலையே ஒரு இன்பத்தையும் கொடுக்கிறது, தென்றல் எனும் வடிவத்தில். அது உடலுக்கு மட்டும் சுகம் தரவில்லை; மனதிற்கும் தருகிறது ஒரு சேதியாக (”தென்றல் வரும் சேதி வரும்"). நீ வந்துகொண்டிருக்கிறாய் என்ற இனிய செய்தியை அந்தத் தென்றலே சுமந்து வந்து கொடுக்கிறது (வருவார் வருவார் என்ற சேதியும் சொல்லும்).

பிரிவினால் மனம் சோர்ந்து, பசியின்மையினால், உண்ணாமலிருந்து, அதனால் உடல் சோர்ந்து ஆலிலை மென்மையினை அடைந்துவிட்ட எனது உடல், நீ வரப்போகிறாய் என்ற உண்மையில் துள்ளிக் குதிக்கும் (ஆலிலை போன்ற உடல் ஆசையில் துள்ளும்).

பிரிவின் ஏக்கத்தாலும், பருவத்தின் தாக்கத்தாலும் நம் சந்திப்பின் தொடர் நிகழ்வுகளை என் மனம் கற்பனை செய்துகொண்டே போகும்; ஆனால் தமிழ்ப் பெண்ணின் இயற்கை நாணமோ என்னைத் தடுத்துக்கொண்டே வரும். மாலை முழுதும் நடக்கும் இந்த மனப்போர் அந்தியில் ஒரு முடிவிற்கு வரும், ஆசை நாணத்தை வெல்வதாக (அந்தியிலே இயற்கை என்னையும் வெல்லும்).

இந்தக் காவியப் பாடலைக் காட்சியாகக் காண....
http://www.youtube.com/watch?v=TIVPKqfqDXo&feature=related